சில பதிவர்கள் செய்யும் தவறுகள் (பாகம் 1)

இன்றிலிருந்து பதிவர்கள் பதிவர்கள் செய்யும் சில அடிப்படை தவறுகளை பற்றி ஒரு தொடராக எழுத உள்ளேன். புதியதாக பதிவுலகம் வரும் பதிவர்கள் இந்த தவறுகளை செய்யாமல் இருக்க உதவும் என்ற நம்பிக்கையில் இந்த தலைப்பை தேர்வு செய்தேன். பதிவர்கள் செய்யும் தவறுகள் வரிசையில் முதலாவதாக நாம் பார்க்க இருப்பது காப்பி&பேஸ்ட் சம்பந்தப்பட்டது. பதிவுலகத்தில் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளதால் இந்த விஷயத்தை முதலில் எழுதுகிறேன்.

காப்பி அடிக்கும் பதிவர்களுக்கு: 
காப்பி&பேஸ்ட் செய்யும் நண்பர்களே நீங்கள் ஒருவேளை புதிய பதிவராக இருக்கலாம். காப்பி செய்து போடுவது தவறு என்று கூட உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம் ஆகவே இப்பொழுது தெரிந்து கொள்ளுங்கள் ஒருவரின் அனுமதியின்றி அவரின் முழு ஆக்கத்தையும் ஒரு வரி கூட மாறாமல் அப்படியே காப்பி செய்து உங்கள் தளத்தில் வெளியிடுவது மிகப்பெரிய தவறு. நீங்கள் காப்பி செய்வது வெறும் எழுத்துக்களை மட்டுமல்ல ஒவ்வொருவரின் சிந்தனையையும், உழைப்பையும், நேரத்தையும் தான் காப்பி செய்து போடுகிறீர்கள் என்பதை ஒரு கணம் நினைத்தால் மனிதாபிமானம் உள்ள எவரும் இத்தகைய செயலில் ஈடுபட மாட்டார்கள்.

தவறு என்று தெரிந்தும் நீங்கள் காப்பி செய்து போடுகிறீர்களா அப்படியானால் உங்களிடம் ஒரே ஒரு கேள்வி? நீங்கள் காப்பி செய்து போடுவதால் உங்களுக்கு கிடைக்கும் பயன் என்ன? உங்கள் வாசகர்களை எவ்வளவு நாள் உங்களால் ஏமாற்ற முடியும். உங்கள் வாசகர்களுக்கு நீங்கள் கொடுக்கும் மதிப்பு ஏமாற்றம் தானா? கூகுள் இருக்கும் வரை உங்களால் யாரையும் ஏமாற்றவே முடியாது என்பதை மறக்க வேண்டாம். அப்படி இருக்க ஏன் காப்பி அடித்து போடுகிறீர்கள் யோசியுங்கள் நண்பர்களே. உங்களால் இதைவிட சிறப்பாக எழுத முடியும். மனம் வைத்தால் மார்க்கமுண்டு என்பது போல நீங்கள் நினைத்தால் ஒன்று அல்ல ஓராயிரம் இடுகைகளை நீங்கள் சொந்தமாக எழுத முடியும்.

ஒருவேளை நாளிதழ்கள் மற்ற இடங்களில் இருந்து காப்பி செய்து போட்டு இருந்தாலும் பரவாயில்லை அவர்களுக்கு அது பெரியதாக தெரிவதில்லை, பெரும்பாலானவர்கள் அந்த புத்தகங்களை படிக்காமல் இருக்கலாம் மற்றும் பழைய செய்திகளை தேடுவோருக்கு உங்கள் தளம் பயன்படலாம் ஆனால் பதிவுகளுக்குள்ளே இது போன்று செய்வது உங்களுக்கு மட்டுமின்றி உங்கள் வாசகர்களுக்கும் ஏமாற்றம் தான் மிஞ்சும்.

இந்த காப்பி&பேஸ்ட் செய்வது புதிய பதிவர்கள் மட்டும் தான் என்று கூற முடியாது. மிகப்பெரிய தளங்களும் இது போன்று காப்பி அடித்து கொண்டு தான் உள்ளது. இப்படி காப்பி&பேஸ்ட் தவிர்க்க முடியாத பட்சத்தில் உங்களுடைய பதிவில் அந்த ஒரிஜினல் தளத்தின் லிங்க் கொடுத்தால் கஷ்டப்பட்டு எழுதியவருக்கு சிறு மரியாதை அளித்தது போல இருக்கும்.

ஆகவே இனி முடிந்த அளவு பதிவுகளை காப்பி&பேஸ்ட் செய்யாமல் எழுத முயற்சிக்கவும். பல நல்ல கருத்துக்களை முன் வைத்து பதிவுலகை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவோம் நீங்கள் கை கோர்த்தால்.



காப்பி&பேஸ்ட்டால் பாதிக்கப்படும் பதிவர்களுக்கு:
காப்பி&பேஸ்ட் செய்பவர்களில் பெரும்பாலானவர்கள் புதிய பதிவர்களாக இருக்கிறார்கள். காரணம் நிறைய பேருக்கு இது போன்று காப்பி அடித்து போடுவது தவறு என்றே தெரியவில்லை. அவர்கள் வலைப்பூக்களை அவர்களின் டைரி என்றே நினைத்து கொண்டு இருக்கிறார்கள் ஆதலால் தான் பெரும்பாலும் காப்பி&பேஸ்ட் நடக்கிறது. அவர்களுக்கு சொல்லி புரிய வைத்தால் இந்த செயலை தடுக்கலாம்.

அது மட்டுமில்லாமல் உங்களுடைய பதிவை ஒருவர் காப்பி செய்து போடுவதால் உங்களுக்கோ உங்களுடைய வலைப்பூவிர்க்கோ எந்த பாதிப்பும் இல்லை. என்ன கொஞ்சம் ஹிட்ஸ் குறையலாம் ஆனால் உங்கள் வலைப்பூவின் மதிப்பையும் வாசகர்களின் எண்ணிக்கையையும் அவர்களால் அசைக்க கூட முடியாது என்பதை மறக்க வேண்டாம். உண்மையை வெகு காலம் யாராலும் மறைக்க முடியாது உண்மை தெரியும் பொழுது அவருடைய தளத்தின் வாசகர்களும் அவரை ஒதுக்கி தள்ளி விட்டு உங்கள் வலைப்பூவை நோக்கி வருவார்கள்.  ஆகவே கவலை படாமல் நீங்கள் எப்பொழுதும் போல எழுதி கொண்டே இருங்கள் அவன் காப்பி அடிக்கிறான் இவன் காப்பி அடிக்கிறான் என்று பார்த்து கொண்டே இருந்தால் உங்களால் நிம்மதியாக பதிவு எழுதவே முடியாது என்பது என் கருத்து.

காய்க்கிற மரம் தான் கல்லடி படும் என்பதை நினைத்து கொண்டு நீங்கள் எப்பவும் போல எழுதுங்க தல நாங்க உங்க கூட இருக்கோம்.

ஆகவே யாரை பற்றியும் எதை பற்றியும் நீங்கள் கவலை கொள்ளாமல் அடிச்சு ஆடுங்கள். வாசகர்கள் எப்பொழுதும் உண்மைக்கு பின்னாடி தான் இருப்பார்கள்.

டிஸ்கி: இந்த பதிவில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் என் சொந்த கருத்துக்களே. தனியாக யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் இந்த பதிவை போடவில்லை. அப்படியும் யார் மனதையும் புண் படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.

படங்கள் கூகுள் உதவியுடன்

Comments